வெள்ளி, 16 அக்டோபர், 2009

குருதி காயாத தேசத்தில் போய் குசலம் விசாரித்த அரசியல்வியாபாரிகள்


இலங்கை இந்திய கூட்டுச்சதித்திட்டத்தின் ஆலாபனைகள் தொடங்கிவிட்டன. இலங்கைக்கான ஊர்வலத்திருவிழாவை முடித்துவிட்டு வந்த இந்தியத் தமிழ்ச் சட்டமன்ற உறுப்பினர்களை, மூலமூர்த்தியே நேரில் சென்று வரவேற்று கலந்துரையாடி வழக்கமான பத்திரிக்கையாளர் மாநாடும் நடத்திமுடித்துவிட்டார். இதனூடாக இலங்கை மக்கள் தொடர்பான தனது கரிசனையை வெளிப்படுத்திய மூலமூர்த்தியான கருணாநிதி, தனது சாதனைப்பட்டியலையும் சேர்த்தே நிரப்பியுள்ளார். ஊரே அழுதபோது ஊமையன் விசிலடித்தது போல தங்களது வழமையான கூத்தை நிறைவேற்றிவிட்டது தமிழக அரசு.இவர்களது பயணத்தின் அடைவின் ஆரம்பகட்ட நடவடிக்கையாக 58 ஆயிரம் பேர் முதலில் குடியேற்றபடுவார்கள் என்ற உறுதிமொழியை இலங்கை அதிபர் வழங்கியுள்ளதாக இந்தியத் தமிழ்ச் சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 11600 குடும்பங்களே குடியமர்த்தப்படுவதாக கருத்தில் கொள்வோமாக இருந்தால், ஏற்கனவே யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களிலிருந்து வன்னி வந்து திரும்பிபோக முடியாத மக்களும் மேற்குறிப்பிட்ட 5 மாவட்டங்களில் உறவினர்களால் வந்து பொறுப்பேற்கக்கூடிய குடும்பங்கள்தான் இந்த மீள்குடிமர்வு உறுதிப்பிரமாணத்தில் உள்ளடக்கக்கூடிய வாய்ப்புள்ளதே தவிர, வன்னிப்பகுதி மக்களல்ல என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

ஐ.நா, ஜரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுடன் பல மேற்கு நாடுகளும் மனிதஉரிமை அமைப்புகளும் தொண்டர் நிறுவனங்களும் மக்கள் குடியேற்றம் தொடர்பாக தொடர்ந்து அழுத்தங்களைக் கொடுத்த வண்ணமுள்ளன. அதேவேளை ஜீ.பி.எஸ் வரிச்சலுகை விடயத்தில் மேற்கு நாடுகளின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கும் இலங்கை அரசு, தற்போது இந்தியாவின் துணையை நாடியிருப்பதும் சந்தர்ப்பத்துக்காகக் காத்துக்கொண்டிருந்த இந்தியாவும் வாய்ப்பைப் பயன்படுத்தியிருப்பதன் எதிரொலிதான் இலங்கை அதிபரின் அழைப்புக்கடிதமும் இந்தியச் சட்ட மன்ற உறுப்பினர்களின் திடீர் விஜயமும் ஆகும்.வவுனியாவின் முகாமிலுள்ள எனது உறவினருடன் "இந்திய சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தீர்களா? அவர்கள் உங்களுடன் கதைத்தார்களா? பார்த்தார்களா?" - என வினவினேன். அதற்கு அவர் “கெலிகொப்டர் பறந்து வந்து நாங்களிருக்கும் முகாமிலுள்ள பாடசாலையில் இறங்கியதைப் பார்த்தோம். எங்களைப் போகவிடவில்லை. ஏற்கனவே ஆசிரியர்கள் குறிப்பிட்ட பொதுமக்களை தயார்ப்படுத்தி வைத்திருந்தனர். அவர்களுடனேயே பேசிவிட்டுச் சென்றனர்" - என்றார். குறுகிய நேரத்திற்குள் இப்படித்தான் இந்தியத் தமிழ்ச் சட்டமன்ற உறுப்பினர்கள் அகதிமுகாம்களில் காட்சியளித்துள்ளனர். தொடர்ச்சியாக முகாம்களைக் கண்காணித்து வரும் மனித உரிமை ஆணையகமும், பராமரித்துவரும் ஜ.நாவின் அமைப்புகளும் முகாம் நிலைவரம் தொடர்பாக காட்டமான அறிக்கைகளை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனால் இலங்கை அரசின் செல்லப்பிள்ளைகளாகச் சென்ற (செத்தவீட்டுக்குச் சென்றவனை தாரை தம்பட்டை சிவப்புக்கம்பள வரவேற்பு மாலை மரியாதைகள் என வரவேற்க, தங்களுக்குரிய பாணியிலே அவற்றை ஏற்றுக்கொண்ட இவர்கள்தான், ஈழத்தமிழர்களிற்காகக் கண்ணீர் விடுவதைத்தவிர வேறு ஒன்றுமில்லை என்று கூறிய மூலமூர்த்தியின் அரசியல் பின்பற்றிகள்.) இந்தியச் சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட, "உண்மை நிலமைகளை நேரில் கண்டறியும் குழுவின்" காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த சுதர்சன் நாச்சியப்பன் அவர்கள், "போரினால் இடம்பெயர்ந்த மக்களிற்காக வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள முகாம்கள் அனைத்துலக நியமனங்களுக்கமைவாகவே அமைக்கப்பட்டுள்ளன. அங்கே பாதுகாப்பிற்காகவே முட்கம்பிகள் போடப்பட்டுள்ளன" என்று நற்சான்றிதழ் வழங்கியுள்ளார்.(நக்கினார் நாவிழந்தார் என்பது இதைத்தானோ!)

ஒரு நாடு தனது பிரஜைகளை சிறையகதிமுகாமில் வைத்திருப்பதற்கு இப்படியொரு விளக்கம் கொடுத்துள்ளார். ஏனென்றால், தமிழகத்தில் முகாம்களிலுள்ள ஈழத்தமிழ் அகதிகளையும் கிட்டத்தட்ட இதேபோன்று கடுமையான விதிமுறைகளுடன் சுதந்திரமாக சந்திப்பதற்கான தடை உட்பட பலகட்டுப்பாடுகளுடன் கையாளும் தன்மையை ஒப்பிட்டுத்தான் அப்படிக்கூறினாரோ தெரியவில்லை.
முகாம்களின் நிலைவரம் தொடர்பாக நற்சான்றிதழ் கொடுத்தது மட்டுமல்லாமல் உண்மை நிலையறியச்சென்ற குழுவின் எந்த இந்தியத் தமிழ்ச் சட்டமன்ற உறுப்பினர்களும் முகாம்களின் உண்மை நிலையை வெளிப்படுத்தவில்லை.(ஊடகத்திற்குப் பேட்டிகளை வழங்கக்கூடாது என்பது இந்தியக் கொள்கை வகுப்பாளர்களினதும் இலங்கையினதும் அன்புக்கட்டளையாகும்). மாறாக அரசாங்கத்திற்குச் சார்பான அறிக்கைகளையும் தங்களின் பயணம் வெற்றிப்பயணமாக அமைந்ததாகக் காட்டுவதிலேயும் அக்கறையுடனிருக்கின்றனர். “போர் நடந்த நேரத்திலெல்லாம் வேடிக்கை பார்த்து விட்டு இப்போது ஏன் வந்தீர்கள்? இந்தியாதான் போரை நடத்தியது. தமிழகம் அதனைத் தட்டிக் கேட்கவில்லை. ராஜீவ் காந்தி கொலையை மனதில் வைத்து இன்னும் எத்தனை ஆயிரம் தமிழ் உயிர்கள் பறிக்க காரணமாக இருக்கப் போகிறீர்கள்” என்று குரலெழுப்பியதனூடாக எந்த நிலையிலேயும் தனது உரிமைக்கான கோரிக்கைகளை, தமது நியாயத்தை, தனது அரசியல் அபிலாசைகள் பற்றி, எவர் முன்னும் பேசத் தயங்காத, தேச விடுதலை தொடர்பான நீண்ட அரசியல் பார்வையுள்ள மக்கள் சமூகம்தான் ஈழத்தமிழர்கள் என்பதை இந்தியா புரிந்துகொண்டிருக்கும். விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டார்கள் என்பதால் தமிழனுக்கு எந்தத் தீர்வையும் திணிக்கலாம். அதை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று எவரேனும் - குறிப்பாக இந்தியக்கொள்கை வகுப்பாளர்கள் - நினைப்பார்களேயானால், அவர்களிற்கு மீண்டும் ஈழத்தமிழ்ச் சமூகம் பாடம் புகட்டும் என்பதை நினைவுபடுத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: